சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டிய நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் அதிகாரிகள் குழு இன்று சென்னை வருகை தருகின்றனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5  மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் அடுத்த 3 மாதங்களில் முடிவடைகிறது. அதன் காரணமாக, புதிய சட்டமன்றம் அமைப்பதறகான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழக சட்டமன்ற தேர்தல்  பணிகளை குறித்து ஆய்வுசெய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், தலைமைச் செயலாளர் உமேஷ் சின்கா மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழு இன்று காலை 11 மணிக்கு தமிழகம் வருகிறது.
தமிழகத்தில் 2 நாள் முகாமிடும் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று மதியம் 12.15 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதையடுத்து,காவல் துறை உயர் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
நாளைய தினம், தமிழக  தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
பின்னர், நாளை மாலை  புதுச்சேரி செல்லும் தேர்தல் ஆணைய குழுவினர் நாளையும், நாளை மறுதினமும் ஆய்வு நடத்துகின்றனர்.
அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் இரவு கேரளாவுக்கு சென்று தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.