புதுடெல்லி: ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகளாக இருந்து, பின்னர் அரசியலில் இணைகிறவர்களுக்கான காத்திருப்பு காலத்தை, தேர்தல் கமிஷன் பரிந்துரைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில், பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் மற்றும் ஏஐஎஸ் அதிகாரிகள், பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரோ அல்லது ராஜினாமா செய்த பின்னரோ, அரசியலில் களமிறங்குகின்றனர்.
சமீபத்தில், பீகாரின் காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த குப்தேஷ்வர் பாண்டே, அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு, தற்போதைய ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்வுதான் தேர்தல் கமிஷனை யோசிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதாதளத்தில் அவருக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கப்படவில்லை என்றாலும்கூட, பதவியிலிருந்து விலகிய வெறும் 5 நாட்களில், ஒரு அரசியல் கட்சியில் இணைந்தார் என்பது பலரின் புருவத்தை உயரச் செய்தது.
அரசுப் பதவியிலிருந்து அதிகாரிகள், பணி ஓய்வுக்குப்பிறகு தனியார் வேலைவாய்ப்புகளில் இணைய விரும்பினால், ஓராண்டு காத்திருக்க வேண்டும். முன்பு, அந்த காத்திருப்பு காலம் 2 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.