டில்லி

சிக்கிம் முதல்வருக்குத் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 6  ஆண்டுகள் தடைக்காலம் 13 மாதங்களாகத் தேர்தல் ஆணையத்தால் குறைக்கப்பட்டது.

கடந்த 1990 களில் பிரேம் சிங் தமாங் சிக்கிம் மாநில கால்நடைத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.  அவர் மீது பசுக்கள் விநியோக திட்டத்தில் ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 2003 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.   கடந்த 2017 ஆம் ஆண்டு சிக்கிம் உயர்நீதிமன்றம் பிரேம்சிங்குக்கு ஒரு வருடச் சிறைத்தண்டனை  விதித்தது.

பிரேம்சிங் 2018 வரை சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.  அத்துடன் அவருக்குக் குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை  விதிக்கப்பட்டது.   எனவே அவர் வரும் 2024 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது.

சில மதங்களுக்கு முன்பு நடந்த சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் பிரேம் சிங் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.     அத்துடன் அவருடைய கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரேம் சிங் முதல்வராக அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை ஆணையம் ஏற்றதால் அவர் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.    இன்னும் ஆறு மாதங்களுக்குள் அவர் ஏதேனும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதால் தனது தேர்தல் போட்டி தடைக்காகத்தை குறைக்கச் சொல்லி ஆணையத்திடம் பிரேம் மனு அளித்தார்.

எனவே தேர்தல் ஆணையம் பிரேம் சிங்குக்கு வழங்கிய ஆறு ஆண்டுகால தடை உத்தரவை 13 மாதங்களாகக் குறைத்துள்ளது.   இதன்படி அவருடைய தடைக்காலம் கடந்த 10 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் விரைவில் அவர் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு உள்ளது.