புதிய கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான கால அவகாசத்தை குறைத்த தேர்தல் கமிஷன்!

புதுடெல்லி: தங்களைத் தேர்தல் கமிஷனில் பதிவு செய்துகொள்ள, புதிய கட்சிகளுக்கான காத்திருப்பு காலத்தை, 30 நாட்களில் இருந்து, 7 நாட்களாக குறைத்து அறிவித்துள்ளது தேர்தல் கமிஷன்.

புதிதாக துவங்கப்படும் அரசியல் கட்சிகள், முறைப்படி தேர்தல் கமிஷனில் தங்களைப் பதிவுசெய்ய, துவங்கப்பட்ட நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்பிறகு, இரு தேசிய நாளிதழ்கள் மற்றும் இரு உள்ளூர் நாளிதழ்களில், இரண்டு நாட்களுக்கு, புதிய கட்சியின் பெயரை விளம்பரம் செய்ய வேண்டும். ஆட்சேபனை இருப்பவர்கள், விளம்பரம் வெளியான 30 நாட்களுக்குள் தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிக்கலாம்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த 30 நாட்கள் கால அவகாசத்தை, 7 நாட்களாக குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.