டில்லி

ராகுல் காந்திக்கு அளித்துள்ள ஷோ காஸ் நோட்டிசுக்கு அளித்த பதிலில் அவர் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நேர்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடெங்கும் பல தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துக் கொண்டு வருகிறார். அவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி அன்று மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாடோல் என்னும் இடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் உரையாற்றி உள்ளார்.

அப்போது ராகுல் காந்தி, “மோடியின் அரசில் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ள்து. அதன்படி பழங்குடியினரை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்து வருகிறது. அரசு உங்களிடம் உள்ள நிலம், காடு மற்றும் நீர்வளம் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு உங்களையும் சுட்டு விழ்த்த உள்ளது” என பேசியதாக இரு பாஜக தொண்டர்கள் தேர்தல் ஆணையத்துக்கு மே 1 ஆம் தேதி புகார் அளித்துள்ளனர்.

இதை ஒட்டி விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியது. அந்த நோட்டிசுக்கு அளித்த பதிலில் ராகுல் காந்தி, “தேர்தல் பிரசாரத்தின் போது வன பாதுகாப்பு சட்டத்தை பற்றி நான் பேசினேன். அதை எளியவர்களுக்கும் புரியும்படி இந்தியில் பேசினேன். ஆனால் அதை வேறு பொருள் படுத்தி மொழி பெயர்க்கப்பட்டு என் மீது புகார் அளிக்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் ஒரு வேகத்தில் பேசுவதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பாஜகவின் சார்பில் பல பிரசாரக் கூட்டதில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் பேசும் போது அவைகளை தேர்தல் ஆணையம் அதிகம் கண்டுக் கொள்வதில்லை. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நேர்மையாக அனைத்து தேர்தல் விதிமுறை புகார்களையும் அணுக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.