மாலோகம்

ரே ஒரு பெண்ணுக்காக அருணாசலப் பிரதேசம் மாலோகம் பகுதியில் தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி அமைக்க உள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் அருணாசலப் பிரதேசத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன.   இம்மாநிலத்தில் மொத்தம் 7.94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  இங்கு வாக்குச் சாவடிகள் அமைக்கும் வேலையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

இம்மாநிலத்தில் சீன எல்லையில் அமைந்துள்ளது மாலோகம் என்னும் சிற்றூர்.  இந்த ஊரில் மிகவும் குறைவான மக்களே வசிக்கின்றனர்.  அவர்களில் தயாங் மற்றும் சொகேலா தயாங் என்னும் கணவன் மனைவியை தவிர மற்றவர்கள் அனைவரும் வேறு வாக்குச் சாவடிக்கு தங்கள் பெயரை சென்ற தேர்தலில் மாற்றிக் கொண்டனர்.

கடந்த 2014 தேர்தலில் இவர்கள் இருவருக்காக இந்த ஊரில் ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.   தயாங் தற்போது தன்னுடைய பெயரை மட்டும் வேறு வாக்குச் சாவடிக்கு மாறிக் கொண்டுள்ளர்.   ஆகையால் அங்குள்ள வாக்குச்சாவடியில் அவர் மனைவி மட்டுமே ஒரே வாக்காளராக இருக்கிறார்.   அந்த ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

தேர்தல் விதிமுறைப்படி இந்த ஒரு பெண்ணுக்காக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி இயங்க வேண்டிய நிலையில் உள்ளது.    இது மலைப்பகுதி என்பதால் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பொருட்களுடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.  இங்கு தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி அமைப்பதை உறுதி செய்துள்ளது.

சொகேலா எப்போது வருவார் என்பது நிச்சயமாக சொல்ல முடியாது என்பதாலும் அவரை உடனடியாக வந்து வாக்களிக்க சொல்ல விதிமுறைகள் கிடையாது என்பதாலும் அவர் வரும் வரை வாக்குச்சாவடி இயங்க வேண்டிய நிலை உள்ளது.