இன்று தீர்ப்பு எதிரொலி: தமிழக சட்டஅமைச்சருடன் முதல்வர் தீவிர ஆலோசனை

சென்னை:

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று காலை 10.30மணிக்கு சென்னை உயர்நீதி மன்றம்  தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், டிடிவி ஆதரவாளர்களான  வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்பட   18 பேர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர்.

இதையடுத்து, கடுப்பான ஆளுட்கட்சியான அதிமுக,  கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, சபாநாயகர் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டமன்ற சபாநாயகர் தனபால் 18பேரையும் தகுதி நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, கடந்த ஜூன் 14ம் தேதி மாறுப்பட்ட தீர்ப்புகளை வழங்கியது.

சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்திருந்தனர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது.

பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சத்யநாராயணன், கடந்த ஜூலை மாதம் முதல் விசாரணையை துவங்கினார்.

12 நாட்களாக நடந்த விசாரணை முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளஇந்த வழக்கின் தீர்ப்பை, இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி சத்யநாராயணன் வழங்குவார் என  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.