சென்னை: நாடு முழுவதும் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், பொதுமக்கள், பச்சை முட்டை மற்றும் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கால்நடை சுகாதார ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாடு மக்களை கொரோனா வைரஸ் அல்லல்படுத்தி வரும் நிலையில், தற்போது பறவை காய்ச்சலும் பரவி, மக்களுக்கு மேலும் துன்பத்தை உருவாக்கி வருகிறது. கேரளா உள்பட இந்தியா முழுவதும்  தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது.  கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்திலும் பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, கோழி, கோழி முட்டைகள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.  இதனால், கோழி, வாத்துக்கள் வளர்ப்போர் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியளார்களிடம் பேசிய   தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தின் சுகாதார ஆய்வு மைய இயக்குனர்  தினகரராஜ், பறவை காய்ச்சல்  கோழி, வாத்து மற்றும் பறவைகளுக்கு மட்டுமே பரவியுள்ளது. இந்த காய்ச்சல் இதுவரை மனிதர்களுக்கு பரவியதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழகத்தில் இதுவரை  பறவை காய்ச்சல் கண்டறியப்படியவில்லை.  இருந்தாலும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பொதுமகக்ள், கோழி, வாத்து இறைச்சிகள் மற்றும் அதன் முட்டைகளை நன்கு வேக வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும்.

சுமார், 70 டிகிரியில் வேக வைக்கும் போது அந்த மாமிசத்தில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.  மேலும், பச்சை முட்டை மற்றும் ஆஃப்பாயில் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.