சென்னை:

மிழக உயர்கல்வித்துறைக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே கருத்து வேறு பாடு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22 ஆண்டுகளாக பொறியியல் கலந்தாய்வை வெற்றிகரமாக நடத்தி வந்த அண்ணா பல்கலைக்கழகம், அதிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது. இது கல்வியாளர்கள் மட்டுமல்லாது மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கை குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் இருப்பது வழக்கம். அதன்படி தற்போது துணைவேந்தர்  சூரப்பா செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கமிட்டியில் ஒரு உறுப்பினராக இதுவரை செயல்பட்டு வந்த உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் மங்கத் ராம் ஷர்மாவை, தமிழக அரசு பொறியியல் சேர்க்கை கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக  அறிவித்தது. இது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பொறுப்பேற்றது முதல், அண்ணா பல்கலையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், பணத்துக்காக மாணவர்களின் தேர்வில் அதிக மதிப்பெண் போடப்பட்ட விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருப்பதாகவும், இந்த ஊழலுக்கு தமிழக உயர்கல்வித் துறையும் உடந்தையாக இருந்தாகவும் கூறப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக பல பேராசிரியர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து வந்தார் துணைவேந்தர் சூரப்பா. இந்த விவகாரத்திலும் அண்ணா பல்கலைக்கழகத்துக் கும், தமிழக உயர்கல்வித்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த பொறியியல் சேர்க்கை கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக  மங்கத் ராம் ஷர்மாவை அறிவித்தது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி யது.

தமிழக அரசின் இந்த நடிவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கமிட்டியின் தலைவர் மற்றும் தமிழ்நாடு பொது முதுகலை மாணவர் சேர்க்கை கமிட்டிகளின் தலைவர் பதவிகளில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.  தமது ராஜினாமா கடிதத்தை உயர்கல்வித்துறை செயலகத்திற்கும்  அனுப்பியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்த ஆண்டு (2019-2020) ஆம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை நடத்துவதில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் விலகியுள்ளது. இனிமேல்  பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தும் என கூறப்படுகிறது.

கடந்த 22 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி களை ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக மாணவர் சேர்க்கையும் நடத்தி வந்த அண்ணா பல்கலைக்கழகம், தற்போது பொறியியல் சேர்க்கை நடத்துவதில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதால் நிர்வாக சிக்கல் ஏற்படுவதாக கூறியுள்ள தமிழக உயர்கல்வித் துறை, சூரப்பாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரம்  கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.