சென்னை:

ன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோவின் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு காரணமாக தலைமை செயலகம் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 6 ஆயிரம் போலீசார் தலைமை செயலகத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.

தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கடும் சோதனைக்கு பிறகே தலைமை செயலக ஊழியர்கள் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள  ஜாக்டோ, ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை முன் எச்சரிக்கையாக போலீசார் கடந்த இரண்டு நாட்களாக கைது செய்து வருகின்றனர். ஆனால், திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ  அறிவித்திருந்தது.

இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு ஊழியர்களை இடையிலே மடக்கி போலீசார் கைது செய்தும், திருப்பி அனுப்பியும் வருகின்றனர். வண்டலூர் பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்ற னர். கடலூர் வழியாக 14 வாகனங்களில் சென்னை வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 135 பேரையும், மதுரை மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பகுதியில் சென்னைக்கு போராட்டம் நடத்த கிளம்பிய ஜாக்டோ ஜியோ அமைப்பினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதுபோல சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தலைமை செயலகம் செல்லும் சாலையில் 6000 போலீசார் குவிக்கப்பட்டு தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கடற்கரை சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளிலும் வாகன சோதனை நடக்கிறது. ஏராளமான அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.