நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: ஜனவரியில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ராகுல்காந்தி பயணம்

டில்லி:

2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதரவை பெறும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வரும் ஜனவரி மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

2 நாள் பயணமாக ஜனவரி 11,12-ம் தேதிகளில்  ஐக்கிய அமீரக நாடுகளுக்கு செல்லும் ராகுல்காந்தி அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மோடி, வெளிநாடுவாழ் இந்தியர்களை சந்தித்து ஆதரவு பெற்று, அதன் காரணமாக சமூக வலைதளங்களில் மோடி அலை ஏற்பட்டு, பாஜகவும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில், ராகுல்காந்தியும் அதுபோல் வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ள ராகுல், அங்குள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்வாவழியினரை சந்தித்துள்ள நிலையில், தற்போது தேர்தல் பயணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்கிறார்.

அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கிளை சாம் பிட்ரோடா தலைமையில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பயண திட்டத்தின்படி, ஏற்கனவே ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ராகுல் பயணம் மேற்கொண்டு அங்குள்ள இந்தியர்களை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தற்போது,  ஜனவரி 11,12-ம் தேதி ஐக்கிய அமீரக நாடுகளுக்கு பயணமாக இருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகளிலும் ஏராளமான இந்தியர்கள்  அனைத்துத் துறைக ளிலும் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக தென் இந்தியர்கள்  அதிக அளவில் வளைகுடா நாடுகளில் உள்ளனர். அவர்களிடம் கலந்துரையாடல் நடத்துவதன் மூலம் தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி  அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தில் துபாய், அபுதாபியில் கலந்துரையாடல் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,  ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். மறுநாள் ஜனவரி 12-ந்தேதி அபுதாபிக்கு சென்று பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சாம் பிட்ரோடா செய்து வருகிறார்.

கார்ட்டூன் கேலரி