சென்னை: பிரதமர் மோடி  நாளை சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க சேவை  தொடங்கி வைக்கப்பட  உள்ள நிலையில், நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை வரும் பிரதமர் மோடி,  நேரு உள்விளையாட்டு அரங்கில் பல்வேறு நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார். அதனப்டி,  விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.  அதன்படி வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை நாளை தொடங்கப்படுகிறது. அத்துடன் சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையேயான 4-வது புதிய பாதை, விழுப்புரம் – கடலூர்- மயிலாடுதுறை – தஞ்சாவூர், மயிலாடுதுறை- திருவாரூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சென்னை ஐஐடியின் தையூர் புதிய வளாகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும, ஆவடி ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள  அர்ஜூன் எம்.பி.டி. எம்.கே-ஐஏ ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் பிரதமர் மோடி ஒப்படைக்கிறார்.

மொத்தம், 4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அத்துடன்,  3 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதன்பின்னர் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருடன் தமிழக தேர்தல் நிலவரம் தொடர்பாகவும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. புதிய சேவையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.