சென்னை: அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே கடுமையான போட்டி எழுந்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என அடுத்தடுத்து கட்சியினரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசி வருகிறார்.
அதிமுகவில் முதல்வர் பதவிக்கு எடப்பாடிக்கும், ஓபிஎஸ்.க்கும் இடையே பகிரங்கமாக போட்டி எழுந்துள்ளது. இது தொடர்பாக இருவரும்  இறங்கி வர மறுத்து தங்களது ஆதரவாளர்களை மூலம் தங்களது வலிமையை காட்டும் பணியில் இறங்கி உள்ளனர். இருவரும் தொடர்ந்து தங்களது ஆதரவாளர்களை தனித்தனியே சந்தித்து பேசி வருகின்றனர்.
இரு தரப்பினரிடையே சில மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் சமரசம் பேசி வந்த நிலையில், இருவரும் விட்டுக்கொடுக்க முன்வராததால், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. செயற்குழுவில்,அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், அதை எடப்பாடி தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  நாளை மறுதினம் (7ந்தேதி) அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என கட்சியின் துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
இந்த நிலையில்,  துணைமுதல்வர் ஓபிஎஸ்  கடந்த 3 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தேனியில்  உள்ள தனது பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்தி வந்தார். இன்று முற்பகல் அங்கிருந்து புறப்பட்டு, சென்னை வந்துகொண்டிருக்கிறார்.  முன்னதாக இன்று காலை கிருஷ்ணா உபதேசத்தை சுட்டிக்காட்டி திடீர் டிவிட்டும் பதிவிட்டிருந்தார். இது கட்சியினரிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும் தனது  ஆதரவாளர்களுடன் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.  தொடர்ந்து, இன்று காலை  தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்களான (எடப்பாடி ஆதரவு) தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, மதிய உணவு இடைவெளிக்கு பிறகு, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு, கே.பி.முனுசாமி , திரு.வையத்தியலிங்கம் (ஓபிஎஸ் ஆதரவாளர்கள்) ஆகியோர் தலைமை செயலகம் வந்தனர்.  அவர்ளுடன் அமைச்சர்கள் இணைந்து முதல் அமைச்சர் 30 நிமிடம்ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆதரவாளர்கள் மட்டுமின்றி எடப்பாடி ஆதரவாளர்களையும் மாறி மாறி சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.