சென்னை:

மிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், தண்ணீரின்றி ஓட்டல்களும் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றன. போதிய அளவு தண்ணீர் கிடைக்காத நிலையில், ஒருவேளை உணவை ரத்து செய்யலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக சென்னை ஓட்டல்கள் சங்க உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

பருவமழை பொய்த்து போனதாலும், தண்ணீரை சரியானபடி சேமிக்க தவறியதாலும் தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் தண்ணீருக்காக குடங்களைத் தூக்கிக்கொண்டு இரவு பகலாக அலைந்து வருகின்றனர்.

சென்னைக்கு தண்ணீர் தரும் அனைத்து ஏரிகள், குளங்கள் வறண்டுவிட்ட நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து போனதால் போதிய நீரின்றி மக்கள் அல்லல் பட்டு வருகினற்னர்.

இந்த நிலையில், ஓட்டகளில் சமையல் தேவைக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக ஒட்டல்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபலமான ஓட்டல்களுக்கு  சென்னை புறநகர் பகுதியில் இருந்து லாரி களில் தண்ணீர் வருவது வழக்கம். ஆனால், தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால், லாரிகளில் தண்ணீர் பிடிக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதன் காரணமாக  ஓட்டல்களில் தண்ணீர் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிக விலை கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால்  தண்ணீர்  பிரச்சினை தீரும் வரை மதிய சாப்பாட்டு விற்பனையை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வருவதாக சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி தெரிவிதுள்ளார். மேலும்,  சாப்பாடு விலையை விட தண்ணீருக்கு செலவழிக்கின்ற தொகை அதிகமாக இருப்பதால் தண்ணீர் பிரச்சினை இன்னும் அதிகமானால் மதிய சாப்பாடு விற்பனையை நிறுத்துவது தவிர வேறு வழியில்லை என்றும்,  தொடர்ந்து தண்ணீர் பிரச்சினை அதிகரித்தால் இந்த முடிவை தான் ஓட்டல் உரிமையாளர்கள் எடுக்க வேண்டியது நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கூறியுள்ளார்.

அதுபோல  தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சுப்பாராவ் கூறுகையில்,  தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை இருப்பதால் மதியம் மட்டும் சாப்பாடு விற்பனையை நிறுத்தலாமா? என்று ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

சென்னை போன்ற மாநகரங்களில் ஏராளமானோர் ஓட்டல்களையே நம்பி வாழ்ந்து வருவதால், தண்ணீர் பிரச்சினை தற்போது அவர்களின் சாப்பாட்டுக்கும் உலை வைக்கும் நிலைக்கு வந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.