சென்னை:

ள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடைவித்து உள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது.  இதற்கான தொடக்க விழா ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், பொங்கல் பரிசு வழங்க தடை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லமனார்கோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பி.சுப்புலெட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

“தமிழகத்தில் டிச. 27 மற்றும் 30-ல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. வாக்களித்த பிறகு அனைத்து வாக்குச்சீட்டுகளையும் ஒரே பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு சீட்டுகளை பிரித்தெடுப்பதில் காலவிரயம் ஏற்படும். வாக்கு எண்ணிக்கையில் குழப்பங்கள் நிகழும். எனவே ஒவ்வொரு பதவிக்கான வாக்குச்சீட்டுகளை போடுவதற்கும் தனித்தனி வாக்குப்பெட்டி பயன்படுத்த வேண்டும்.

மேலும்,  தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் சர்க்கரை, கரும்பு, பச்சை அரிசி வழங்கும் திட்டம் டிச .20-ம் தேதி யிலிருந்து செயல்படுத்தப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது இத்திட்டத்தை செயல்படுத்துவது ஆளும்கட்சி சார்பில் சட்டப்பூர்வமாக லஞ்சம் வழங்குவது போலாகும்.

மேலும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே பொங்கல் இலவச பொருட்களுக்கான டோக்கன் தருவதாக ஒவ்வொரு பகுதியிலும் அதிமுக நிர்வாகிகள் வாக்காளர்களிடம் சொல்லி வாக்குசேகரித்து வருகின்றனர்.  உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது இலவச திட்டத்தை செயல்படுத்துவது தேர்தல் நடத்தையை மீறும் செயலாகும்.

எனவே பொங்கல் பரிசு திட்டத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு செயல்படுத்தவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி வாக்குப்பெட்டி பயன்படுத்தவும்  நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் துரைச்சாமி, ரவீந்திரன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது, எஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் மட்டுமே நாளை முதல் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக கூறினார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், 27 மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படக்கூடாது என்றும், மற்ற 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கலாம் என்று கூறினார்.

மேலும், மனுதாரரின் ஒவ்வொரு பதவிக்கும் தனி வாக்குப்பெட்டி கோரிக்கையை அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக அவர் முன்வைக்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.