பொதுத் தேர்தல் குறித்த பொய் செய்தி : விசாரணை கோரும் தேர்தல் ஆணையம்

டில்லி

ந்த வருட மக்களவை பொதுத் தேர்தல் தேதிகள் குறித்து பொய்யான செய்திகள் வெளியிட்டவரை கண்டறிய விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதுள்ள மக்களவையின் ஆயுட்காலம் இந்த வருடத்துடன் முடிவடைகிறது. ஆகவே இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல்கள் நடக்க உள்ளன. அதை ஒட்டி கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டன. ஒரு சில மாநிலங்களில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துள்ளன. மற்ற மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெறுகிறது.

கடந்த ஒரு வாரமாக முகநூல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் தேர்தல் தேதி அட்டவணை ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது. அது ஒரு பொய்ச் செய்தி என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆயினும் அதை பலர் நம்பினார்கள். இந்த தகவலை உருவாக்கியவர் மற்றும் பரப்புபவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதை ஒட்டி தலைமை தேர்தல் அதிகாரி டில்லி காவல்துறையினரிடம் விசாரணை நடத்தக் கோரி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த ஒரு வாரமாக முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தேர்தல் தேதி அட்டவணை என்னும் பொய்ச் செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகவும் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் இந்த பொய்ச் செய்தியால் பொதுமக்களுக்கு தேவையற்ற தொல்லைகளும் உண்டாகி வருகிறது.

அதனால் நான் இந்த தகவலை உருவாக்கியோர் மற்றும் பரப்புவோரை கண்டு பிடித்து அதற்குரிய சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த நடவடிக்கைகள் குறித்து நீங்கள் டில்லி தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல்கள் அளிக்கவும்” என எழுதப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: action, election commission, Election schedule, fake news, தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகள், நடவடிக்கை, பொய்ச்செய்தி
-=-