சென்னை:

பாறையின் அடியில் பொருளாதாரம் மோதி நிற்கிறது. சரியான கொள்கை முடிவை அரசு எடுத்தால் மீண்டும் பொருளாதாரம் மேல் நோக்கி செல்லும் என்று பொருளாதார நிபுணர் குருமூர்த்தி பேசினார்.

சென்னை சர்வதேச மையம் சார்பில், ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பங்கு மற்றும் தாக்கம்’’ என்ற தலைப்பில் கருத்தரங்கு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பொருளாதாரப் பள்ளியில் நடந்தது.

இதில், பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான குருமூர்த்தி பேசுகையில், ‘‘ பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பணம் வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளது. வரி மூலமான வருவாய் 20% அதிகரித்துள்ளது.

முன்கூட்டியே வரி செலுத்துவது 2017-18 -ஆம் ஆண்டில் 42% அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு முதலீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆனால் தற்போது தானாகவே முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். பரஸ்பர நிதி முதலீடு உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு 10.5% முதல் 11.8% வரை அதிகரித்துள்ளது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘முத்ரா வங்கி திட்டம் தொடங்கிய பின்னர் தான் பணமதிப்பிழப்பு நடவடி க்கை எடுக்கப்பட்டது. முத்ரா வங்கித் திட்டத்தை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. இந்தத் தருணத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் சேர்ந்து கொண்டதால் சிறிய தொழில்களுக்கு பணம் செல்லவில்லை. தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடி க்கை ஆகியவற்றை ஒன்றாக செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கடினமானதுதான். இதனை இப்போது செய்யவில்லையெனில், 2020 – ஆம் ஆண்டில் உயர் மதிப்பு ரூபாய் 30 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும். ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் கருப்புப் பணம் முக்கிய தொகையாக இருந்தது.

கணக்கில் இல்லாத பணம் அதிகமாக புழங்கியது. அதை வங்கி முறையில் கொண்டு வர இந்த நடவடிக்கை ஒரு பெரிய முயற்சியாக அமைந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்கால முதலீடாகவே பார்க்கிறேன். இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தின் முதலீடாகவே அமையும்’’ என்றார்.

குருமூர்த்தி தொடர்ந்து பேசுகையில், ‘‘நம் நாட்டில் பொருளாதாரம் தற்போது பாறையின் அடியில் மோதி நிற்கிறது. இந்த சூழ்நிலையில் இருந்து தப்ப முடியாது. இது தொடர தான் செய்யும்.

எனினும் செயல்படாத சொத்துக்கள், முத்ரா வங்கி கணக்குகள் உள்ளிட்ட 2 அல்லது 3 அம்சங்களில் அடுத்த 6 மாதங்களில் அரசு நல்ல முடிவுகளை எடுத்தால் பொருளாதாரம் மீண்டும் துளிர்விடும் வாய்ப்பு உள்ளது. சரியான கொள்கை முடிவுகளை எடுத்தால் பொருளாதாரம் உடனடியாக மேல் நோக்கி செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.

உள்நாட்டு பொருளாதாரம் நன்றாக உள்ளது. மக்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன்கள் இனிமேல்தான் தெரிய வரும். மோசமான விளைவுகளை கடந்துவிட்டோம். இருப்பினும், தற்போதுள்ள பொருளாதார அழுத்தம் நீங்க, வாராக் கடன் விதிமுறைகளை மாற்றியமைத்து கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.