புதுடெல்லி: அரசியல்வாதிகளுக்கு பொருளாதாரம் என்பது கடைசி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி.

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா எழுதியுள்ள ‘Relentless’ என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய அவர், புத்தகத்தில் இடம்பெற்றிருந்த இதே கருத்தை வலியுறுத்தி இவ்வாறு பேசினார்.

“சின்ஹாவை நான் முதன்முதலில் சந்தித்தபோது, அவர் மீது எனக்கு பெரிய மதிப்பீடு இல்லை. ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரி, பொது வாழ்க்கைக்கு வருவது குறித்து நான் உயர்ந்த மதிப்பீடுகளை அப்போது கொண்டிருக்கவில்லை” என்றார் பிரனாப் முகர்ஜி.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், முன்னாள் பாரதீய ஜனதா உறுப்பினர் அருண் ஷோரி, பத்திரிகையாளர் பர்கா தத் மற்றும் முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரி வஜாஹத் ஹபிபுல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

“நாட்டின் சிவில் சர்வீஸ் அதிகாரிகள், ஆளும் தரப்பினரை மகிழ்விக்க வேண்டுமென்ற நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களை மரியாதை குறைவாக நடத்துகிறார்கள்” என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் யஷ்வந்த் சின்ஹா.