சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் திட்டத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

 

சென்னை :

கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கம் முதல் முட்டுக்காடு வரை மழை நீர் வடிகால் அமைக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சமீபத்தில் துவக்கி வைத்துள்ள மழை நீர் வடிகால் திட்டத்திற்கு ஜெர்மன் நாட்டு மறுசீரமைப்பு நிதி வங்கி கே.எப்.டபுள்யு நிதி உதவி செய்துள்ளது.

கொட்டிவாக்கம் முதல் முட்டுக்காடு வரையிலான கடற்கரையோர பகுதிகளில் உள்ள மணற்பாங்கான இடங்கள் மழை நீரை உறிஞ்சுவதுடன் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்குகிறது.

இயற்கையாக மழைநீர் வடியும் வகையில் அமைந்துள்ள மணற்பரப்புகளில் மழை நீர் வடிகால் என்ற பெயரில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு இந்த பகுதியின் இயற்கை அமைப்பை சீர்குலைப்பதுடன், மழை நீரில் அடித்துவரும் வண்டல் இந்த கட்டுமானங்களில் தேங்கி நிற்கவும், இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வழிவகுத்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தை அமல் படுத்துவதற்கு முன் மாநகராட்சி ஆணையர் இங்குள்ள மக்களின் ஆலோசனையை பெறவில்லை என்று கூறி இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் சென்னை மாநகராட்சியின் இந்த மழை நீர் வடிகால் திட்டத்திற்கு எதிரான கூட்டணி அமைத்து போராட முடிவெடுத்திருக்கின்றனர்.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்யும் ஜெர்மன் நாட்டு வங்கிக்கும் ஜெர்மன் தூதரகம் மூலம் தங்கள் கோரிக்கைகளை அனுப்பவும் மழைநீர் வடிகால் எதிர்ப்பு கூட்டணி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் லாரிகளில் குடிநீர் வழங்கிய இந்த மணற்பரப்பு மழைநீர் வடிகால் என்ற பெயரில் பாலைவனமாகிவிட கூடாது என்று சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.