புதுடெல்லி: ராணுவ வீரர்களின் படங்களை தங்களுடைய தேர்தல் விளம்பரங்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ள அதேவேளையில், கட்சிகளுக்கு அதுதொடர்பாக ஒரு விரிவான அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம் வழங்கவுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சமீபத்தில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலையடுத்து. பாகிஸ்தானுடன் நடந்த மோதலை, பாரதீய ஜனதா கட்சி அரசியலாக்கியது பல தரப்பிலும் கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.

டெல்லியின் பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட விமானப்படை வீரர் அபிநந்தனை வைத்து போஸ்டர் தயார்செய்து, அதை முகநூல் பக்கத்திலும் பதிவிட்டார். அந்த செயல் கடும் சர்ச்சையைக் கிளப்பவே, பின்னர் அப்படம் நீக்கப்பட்டது. தேர்தல் கமிஷனும், சம்பந்தப்பட்ட அந்த உறுப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது, இதுதொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு விரிவான அறிவுறுத்தலை வழங்க தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. மார்ச் மாதம் 9ம் தேதி, ராணுவ விஷயங்களை அரசியல் மயப்படுத்துவதை தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியிருந்தது தேர்தல் கமிஷன்.

தற்போது, மீண்டும் ஒரு விரிவான அறிவுறுத்தலை தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளுக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி