ஹராரே:

ஜிம்பாப்வேயில் நெருக்கடிக்கு மத்தியிலும் அதிபர் பதவியில் இருந்து விலக மறுக்கும் ராபர்ட் முகாபேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் சூடுபிடித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் அதிபர் பதவி வகித்து வருபவர் ராபர்ட் முகாபே (வயது 93). இவரது மனைவி கிரேஸ் முகாபேவுக்கும், முன்னாள் துணை அதிபர் எமர்சன் மனன்காக்வாவுக்கும் இடையே அடுத்த அதிபர் யார் என்பதில் போட்டி ஏற்பட்டது. இதனால் ஆளுங்கட்சியில் பிளவு ஏற்பட்டது.

அதைப் பயன்படுத்தி ராணுவம் களத்தில் குதித்து அதிபரிடம் இருந்து கடந்த 15ம் தேதி அதிகாரத்தை பறித்தது. அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ராபர்ட் முகாபேயை பிராந்திய தூதர்கள் உடனிருக்க ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் முகாபே பதவி விலக மறுத்து வருகிறார். அவர் இன்னும் அவகாசம் கேட்க முயற்சிப்பது தெரியவந்துள்ளது. ராபர்ட் முகாபேயை சுமுகமான முறையில் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வாவை அதிபர் ஆக்கும் திட்டத்தில் ராணுவம் செயல்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அதிபரின் வீழ்ச்சியை ஒரு தரப்பினர் எதிர்பார்த்து கொண்டாடும் சமயத்தில், அவர் பதவி விலக கூடாது. அவரது ஆட்சி தொடர வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் கவலை அடைந்துள்ளனர். எனினும் அவர் பதவி விலக வேண்டும் என்றே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.