Ecuador-earthquake-Death
ஜப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள், அந்த நாட்டையே புரட்டி போட்டது. 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். சாலைகள், ரெயில் பாதைகள் உருக்குலைந்து போயின.
அதன் சுவடு மறைவதற்கு முன்பாக இந்த இயற்கை சீற்றம், தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரையும் பதம் பார்த்துள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்குவடார், பசிபிக் பெருங்கடல் பகுதியில் நாஸ்கா–தென் அமெரிக்க புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் நேரிடுவது வழக்கமான ஒன்று என்றாலும், சமீப காலத்தில் இப்படி ஒரு நில நடுக்கம் நேரிட்டதில்லை என்று சொல்லுகிற வகையில், இம்முறை ருத்ர தாண்டவாடி விட்டது.
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 6.58 மணிக்கு மியூஸ்னி நகருக்கு 27 கி.மீ. தொலைவில் 19.2 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்து தாக்கியது.
ரிக்டர் அளவுகோலில் இது 7.8 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் கணித்துள்ளது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று 5.4 புள்ளிகளாக பதிவானது. பல நூறு மைல்களுக்கு அப்பாலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை அறிவித்து, பின்னர் திரும்பப்பெற்றது.
நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளையும், கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்தனர். கட்டிடங்கள் குலுங்கி, இடிந்து விழுந்ததால் மக்களிடம் பெரும் பதற்றம் நிலவியது.
நில நடுக்கத்தாலும், அதிர்வுகளாலும் பாலங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் உருக்குலைந்து போயின. வாகனங்கள் சுக்குநூறாகின. இடிபாடுகளில் சிக்கி தவித்த மக்கள் ஓலமிட்டது பரிதாபமாக இருந்தது. நில நடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியில் பல கிராமங்கள் அழிந்தன.
இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் முழுக்கவனம் செலுத்தினர்.
இருப்பினும் இந்த இயற்கை சீற்றம், 238 பேரை பலி கொண்டது. 1,500 பேரை படுகாயம் அடையச்செய்தது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். கடலோரப்பகுதி மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து மேடான பகுதிகளுக்கு சென்றனர்.