கோவை:

ட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர்  கடந்த  ஏப்ரல் மாதம் 30ந்தேதி முதல்  மே மாதம்  5ந்தேதி வரை தொடர் ரெய்டு நடத்தினர்.

இந்த ரெய்டின்போது,  மார்ட்டினுக்கு சொந்தமான கோவை வீட்டின் ரகசிய அறையில் ரூ. 8.25 கோடி ரொக்கத்துடன் ரூ25 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  நகைகளும்  பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் ஏராளமான ஆவணங்களையும் அதிகாரிகள் அள்ளிச்சென்றனர்.

இதுகுறித்து ஆய்வு செய்து வந்த அதிகாரிகள்,  மார்ட்டின் முறைகேடாக சொத்து சேர்த்திருப்பதும்,  சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளதாக கூறினர்.

கடந்த 2009 – 10 ம் ஆண்டில் லாட்டரி மூலம் ஈட்டிய 910.3 கோடி ரூபாய் வருவாயை மறைத்து அதை தொழிலதிபர் மார்ட்டின், 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக போலியாக கணக்கு காட்டி உள்ளதாகவும்,  லாட்டரி விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள சிக்கிம் மற்றும் கேரளா அரசுகளிடம் போலியான கணக்குகளை காண்பித்து முறைகேடாக கோடிக்கணக் கில் லாபம் ஈட்டியிருப்பதும் ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே மார்ட்டினின் 138.5 கோடி மதிப்புடைய சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, தற்போது  கோவையில் உள்ள 61 வீடுகள்  மற்றும் 82 வீட்டு மனைகள் உள்பட மொத்தம் 119.6 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளையும்  முடக்கி நடவடிக்கை எடுத்து உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.