மும்பை

காராஷ்டிர நவ நிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கப்  பிரிவு விசாரணை விவகாரத்தில் சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே ஆதரித்து பேசி உள்ளார்.

மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனைக் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே முதலில் சிவசேனை கட்சியில்  இருந்தார்.  சிவசேனைக் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு இவர் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.   ராஜ் தாக்கரே கடந்த 2055 ஆம் ஆண்டு சிவசேனையில் இருந்து பிரிந்து தனது கட்சியைத் தொடங்கினார்.   அது முதல் அவர் சிவசேனைக் கட்சிக்கு எதிராக உள்ளார்.

முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனைக் கட்சியின் மூத்த தலைவருமான  மனோகர் ஜோஷியின் மகன் உமேஷ் ஜோஷி ஆவார்.  இவரும் ராஜ் தாக்கரேவும் இணைந்து ஒரு நிறுவனம் நடத்தி வந்தனர்.   இந்த நிறுவனம் தற்போது பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கட்டுமான ஒப்பந்தத்தை ஏற்று நடத்தியது.  அந்த நிறுவனத்தில் இருந்து அதன் பிறகு ராஜ் தாக்கரே விலகி விட்டார்.

ஐ எல் அண்ட் எஃப் எஸ் நிறுவன வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை உமேஷ் ஜோஷியின் நிறுவன கணக்குகளை ஆரம்பத்தில் இருந்து சோதிக்க உள்ளது.  இதனால் முன்பு இந்த நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த ராஜ் தாக்கரேவை விசாரணைக்கு வருமாறு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.    பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ராஜ் தாக்கரே அழைக்கப்பட்டது அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்நிலையில் சிவசேனைக் கட்சி தலைவர் உதவ் தாக்கரே இன்று தனது மும்பை பாந்த்ர இல்லத்தில் செய்தியாளர்களிடம், ”அமலாக்கத்துறை ராஜ் தாக்கரேவிடம் விசாரணை செய்ய நோட்டிஸ் அனுப்பி உள்ளது.   ஆனால் இந்த விசாரணை மூலம் ராஜ் தாக்கரே மீது எவ்வித குற்றமும் வெளிவராது.   இது குறித்து நாம் இன்னும் ஒரிரு நாட்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் இரு கட்சித் தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாகப் பேசி வந்தனர்.  ராஜ் தாக்கரேவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை எனினும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தது.  தற்போது  சிவசேனைக் கட்சி தலைவர் இவ்வாறு ராஜ் தாக்கரேவுக்கு பரிந்து பேசியது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.