Random image

குட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு

சென்னை: தமிழகத்தையே உலுக்கிய குட்கா வழக்கில் அமலாக்கத்துறை தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு செங்குன்றத்தில் உள்ள குட்கா ஆலை ஒன்றில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, சட்ட விரோதமாக குட்கா, பான் மசாலா ஆகியவை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதோடு, கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக குறிப்பிடப்பட்ட டைரி ஒன்றும் சிக்கியது.

டைரியில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பெயர் இடம் பெற்றதாக கூறப்பட்டது.

இந் நிலையில் குட்கா வழக்கில் அமலாக்கத்துறை தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, அரசு ஊழியர்கள் 7 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குட்கா ஆலை உரிமையாளர் விக்னேஷ், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் உள்பட ஒருசிலரின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.