கொரோனா நிவாரண நிதி : எரிபொருள் மீதான எக்சைஸ் தீர்வை அதிகரிப்பு

டில்லி

கொரோனா நிவாரண நிதிக்குத் தேவைப்படும் ரூ.30000 கோடிக்காக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தீர்வையை அதிகரிக்க உள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் நமது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.  மாறாக கடந்த மார்ச் மாதம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.12 எக்சைஸ் தீர்வையை உயர்த்த நாடாளுமன்றத்திடம் அரசு ஒப்புதல் பெற்றது.   மே மாதம் பெட்ரோலுக்கு ரூ.12 மற்றும் டீசலுக்கு ரூ.9 உயர்த்தப்பட்டது.

இதையொட்டி மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தீர்வை விரைவில் உயரும் என எதிர்பார்ப்பு நிலவியது.  இவ்வாறு உயர்த்தப்படும் போது அந்த உயர்வு  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எதிரொலிக்கும் எனவும் இதனால் மக்கள் மிகவும் துயருறுவார் எனக் கவலை  எழுந்தது.

தற்போது கொரோனா ஊரடங்கால் பொருளாதார மந்தம் மற்றும் நிவாரண நிதி சுமை அரசுக்கு கடும் நிதி நெருக்கடியை அளித்துள்ளது,  தற்போதைய நிலையில் அரசுக்கு ரூ 30000 கோடி பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்படுகிறது.  எனவே அந்த நிதிக்காக அரசு எரிபொருட்கள் மீதான எக்சைஸ் தீர்வையை உயர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த உயர்வு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.6 ஆகவும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ,.3 ஆகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.    ஏற்கனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அக்டோபர் மாதம் மேலும் நிவாரண உதவிகள் அளிக்கப்படும் எனக் கூறி இருந்ததால் அதைச் சரிக்கட்ட இந்த உயர்வு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த உயர்வு மூலம் அரசுக்கு வருடம் முழுவதும் சேர்ந்து மொத்தம் ரூ.60000 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது.  தற்போது சில மாதங்களே மீதம் உள்ளதால் ரூ.30000 கோடி வருமானம் கிடைக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.