பிஎன்பி மோசடி: நிரவ் மோடியின் மேலும் 41 சொத்துக்கள் முடக்கம்

டில்லி:

ஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடி காரணமாக தலைமறைவாக உள்ள நிரவ் மோடியின் மேலும 41 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்த சொத்துக்களின் மதிப்பு  ரூ.1217.20 கோடி என்றும், இவை அனைத்தும் அசையா  சொத்துக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியின்  கிளையில் நடைபெற்ற  ரூ.11,400 கோடி மதிப்பிலான பண மோசடி விவகாரத்தில்,  மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீஸ்வரர் நிரவ் மோடி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

இதற்கிடையில்,நிரவ் மோடி குடும்பத்தினருடன் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் மோடி அரசு மீது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24ம் தேதி நடந்த சோதனையில் நிரவ் மோடிக்கு சொந்தமான 523.72 கோடி ரூபாய் மதிப்பிலான 21 அசையா சொத்துகள் முடக்கப்பட்டன.  மேலும் அவரது வெளிநாட்டு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மேலும் ரூ.1217.20 கோடி மதிப்பிலான அசையா  சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த முடக்கப்பட்ட சொத்துக்களில் மெகுல் சோக்ஷியின் சொத்துக்களும் அடக்கம் என்றும், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள  15 வீடு  மற்றும் 17 அலுவலகம்,  ஐதராபாத்தில் உள்ள  நகை விற்பனை அலுவலகம், கொல்கத்தாவில் உள்ள ஷாப்பிங் மால், அலிபா இல்லம், மகாராஷ்டிராவில் உள்ள  231 ஏக்கர்  நிலம் உள்பட 41 அசையாக சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.