டில்லி

நிரவ் மோடியின் வழக்கை விசாரிக்கும் அதிகாரியை வழக்கில் இருந்து அமலாக்கத்துறை விலக்கி உள்ளது.

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி வங்கி மோசடி செய்துவிட்டு குடும்பம் மற்றும் பங்குதாரர் மெகுல் சோக்சியுடன் நாட்டை விட்டு ஓடி விட்டார். அவரை தேடும் முயற்சியில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நிரவ் மோடி லண்டன் நகரில் வசதியாக வாழ்ந்து வருவது தெரிய வந்தது. சர்வதேச காவல்துறை அறிவிப்பின்படி தேடப்பட்டு வரும் குற்றவாளியான நிரவ் மோடி லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

லண்டன் நீதிமன்றம் நிரவ் மோடிக்கு ஜாமீன் அளிக்க மறுத்ததை ஒட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி சத்யபிராத் குமார் லண்டன் சென்றுள்ளார். இந்திய வருமானத் துறை அதிகாரியான அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பை பகுதி 1 ல் பணியாற்றி வருகிறார். அவர் இந்த வழக்குடன் நிலக்கரி பேர ஊழல் வழக்கையும் விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் அவரை இந்த வழக்கில் இருந்து விலக்குவதாக அமலாக்கத் துறை சிறப்பு இயக்குனர் வினீத் அகர்வால் அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இந்த பகுதி 1 ல் பணி புரிவதால் அவரை இடமாற்றம் செய்ய உள்ளதால் அவர் தற்போது கவனித்து வரும் நிரவ் மோடி வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள்தாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள்து.

அதே வேளையில் சத்யபிராத் குமார் நிலக்கரி பேர ஊழல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க உள்ளார். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவரை விசாரணை அதிகாரியாக நியமித்துளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்கத் துறை மாற்ற முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணையை மட்டும் குமார் தொடருவார் என கூறப்பட்டுள்ளது.