சுஷாந்த் சிங் பொருளாதார நிலை பற்றி அவர் குடும்பம் அறியாது : அமலாக்கத்துறை

மும்பை

றைந்த நடிகர் சுஷாந்த் சிங் பொருளாதார நிலை குறித்து அவருடைய குடும்பத்துக்குத் தெரியாது என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அன்று அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.  அதையொட்டி பதியப்பட்ட வழக்கில் அவருடைய காதலி ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை பதியப்பட்டது.   ரியா சக்ரவர்த்தி உள்ளிட்டோர் மீது சுஷாந்த் சிங் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதியப்பட்டது.

ரியா சக்ரவர்த்தி பெயரில் சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 கோடி மாற்றப்பட்டுள்ளதாகத் தந்தை புகாரில் தெரிவித்தார்.  மேலும் சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் கணக்கில் சரியாகக் காட்டப்படாமல் ரூ.17 கோடி வரை பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் அவை குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ளோர் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதையொட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் சுஷாந்த் சிங் வங்கி பரிவர்த்தனைகளை ஆராய்ந்துள்ளனர். அதிகாரிகள், “சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கு சோதனை இன்னும் முழுவதுமாக முடிவடையவில்லை.  இதுவரை சுஷாந்த் சிங் கணக்கில் எவ்வித சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனையும் கண்டறியவில்லை.   மேலும் இந்தச் சோதனையின் மூலம் சுஷாந்த் சிங்கின் பொருளாதார நிலை குறித்து அவர் குடும்பத்தினருக்குத் தெரியவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் புகாரில் சொல்லப்பட்டது போல் ரியாவின் வங்கிக் கணக்கிலோ மற்றும் குற்றம் கூறப்பட்டுள்ளவர்கள் கணக்கிலோ எவ்வித பரிவர்த்தனையும் தென்படவில்லை.   ரியா அவருடைய காதலி என்பதால் அவர் ரியாவுக்கு அழகு நிலையம் உள்ளிட்ட செலவுகளை மட்டுமே செய்துள்ளார்.  மேலும் அவர் தனது பணத்தை பெரும்பாலும் வரிகள் செலுத்துவதில் செலவழித்துள்ளார்.  இவற்றைப் பற்றி அவரது குடும்பத்தினருக்கு ஒன்றும் தெரியவில்லை.” எனத் தெரிவித்துள்ளனர்.