திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் 89.19 கோடி ரூபாய் சொத்து முடக்கம்!

சென்னை: அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் 89.19 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. 25ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற முறைகேடு தொடரப் பட்ட வழக்கில் தற்போது அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.

அரக்கோணம் தொகுதி திமுக எம்பியாக இருப்பவ்ர் ஜெகத்ரட்சகன். இவருக்கு சென்னை குரோம்பேட்டையில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை உள்பட ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
இவர் கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில், தனது மருத்துவக்கல்லூரி அருகே  உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை  மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகாரின் பேரில் சிபிஐட விசாரித்து வருகிறது.
இதை எதிர்த்து ஜெகத்ரட்சகன் சார்பில், வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு பிறகு, மீண்டும் விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில்,  வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  சிங்கப்பூர் நிறுவனத்தில் விதிகளை மீறி பங்குகள் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு, தற்போது ஜெகத்ரட்சகன் உடல்நலப் பாதிப்பு காரணமாக ஆஜராக முடியாத நிலையில், அவருக்கு பதிலாக அவரது மகன்  கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.
இந்த  நிலையில் எம்பி ஜெகத்ரட்சகனின் 89.19 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளதாக அறிவித்து உள்ளது.
ஃபெமா ( FEMA) சட்டத்தின் பிரிவு 4ன்படி, (அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம்)  சிங்கப்பூர் சார்ந்த நிறுவனத்தில் சட்டவிரோத முதலீடு காரணமாக,  ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை 89.19 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது.