மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ. 13 ஆயிரம் கோடியை கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோரி நிரவ் மோடிக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நிரவ் மோடியின் தந்தை தீபக் மோடி, சகோதரர் நிஷால் மோடி, சகோதரி பூர்வி மேத்தா, இவரது கணவர் மாயான்க் மேத்தா, ஃபயர்ஸ்டார் டைமண்ட் நிறுவன இயக்குனர் மிகிர் பன்சாலி ஆகியோருக்கு சம்மன் இ.மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களிடம் நிதி பரிமாற்றம் குறித்த கேள்விகளை எழுப்ப அமலாக்க துறை முடிவு செய்துள்ளது. இந்த 5 பேரும் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர்.

தீபக் மோடி பெல்ஜியத்திலும், நிஷால் மற்றும் பன்சாலி அமெரிக்காவிலும், மேத்தாக்கள் ஹாங்காங்கிலும் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த இடங்கள் உறுதி செய்யப்படவில்லை என்பதால் இ.மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்மன் கிடைத்த அடுத்த ஒரு சில நாட்களில் அமலாக்க துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.