எடப்பாடிக்கு தனது அமைச்சர்கள்மீது நம்பிக்கையில்லை! டிடிவி தினகரன்

சென்னை:

ன்று  வெளிநாடு செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்காத நிலையில், எடப்பாடிக்கு சக அமைச்சர்கள் உள்பட  யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் பொறுப்பை ஒப்படைக்கவில்லை என்று அமுமுக தலைவர் தினகரன் கூறியுனார்.

திண்டுக்கல் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. பொதுவாக முதல்வர் பொறுப்பில் இருக்கும் நபர்கள் அதிக நாட்கள் வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை யாரிடமாவது ஒப்படைப்பது வழக்கம்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது அமைச்சர்கள் யார் மீதும் நம்பிக்கை இல்லாததாலும், பயத்தாலும் தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றுள்ளார் என்று விமர்சித்தார்.

ஏற்கனவே நடைபெற்ற சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற தொழில் முனைவோர்கள் எங்கே சென்றார்கள்? என்று கேள்வி எழுப்பியவர், இங்கு தொழில் செய்தவர்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தராததால், அவர்கள் வேறு மாநிலத்துக்கு சென்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்.

அ.தி.மு.க.விலும் தற்போது கோஷ்டி அரசியல் உருவெடுத்து இருப்பதாகவும், ஆட்சி இருப்பதால் கட்சியில் பலர் உள்ளனர், ஆனால், இந்த  ஆட்சி இல்லாமல் போய் விட்டால் நெல்லிக்காய் மூட்டைகளைப் போல அனைவரும் சிதறி ஓடி விடுவார்கள் என்று கூறினார்.

மேலும்,  காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பாக மத்திய அரசு ஜனநாயக முறைப்படி அனைத்து கட்சி பிரதிநிதிகளை கலந்து பேசி முடிவை அறிவித்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.