எடப்பாடி பிரசாரத்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வடசென்னை… பொதுமக்கள் அவதி
சென்னை:
வடசென்னை தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வடசென்னை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டதால், அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராயபுரம், காசி மேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழகம் மருத்துவ துறையில் சாதனை நிகழ்த்துவதாகவும், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம், தடையற்ற குடிநிர் வழங்கப்பட்டு வருவதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.
நாடு பாதுகாப்பாக இருக்க வலிமையும், திறமையும் மிக்க மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எடப்பாடி பிரசாரம் காரணமாக, அதிமுகவினர் சாலைகளில் திரண்டதால் வடசென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்ய முன்வராத நிலையில், வாகன ஓட்டிகள் சாலைகள் முழுவதும் சென்ற நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மின்ட் மேம்பாலம் முதல் வியாசர் பாடி, பெரம்பூர், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், எண்ணூர் வரையும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர்.