திருப்பதியில் எடப்பாடி குடும்பத்தோடு சாமி தரிசனம்!

திருப்பதி,

திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.

நேற்று முன்தினம் துணைமுதல்வர் ஓபிஎஸ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்று வந்த நிலையில் நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான தரிசிக்க திருப்பதி சென்றார்.

அங்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதலமைச்சரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஆந்திர போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை ஏழுமலையானை அவர் குடும்பத்தோடு சென்று தரிசனம் செய்து வழிபட்டார்.

திருமலையில் நடைபெறும் வாராந்திர சேவையான அஷ்டதளபாத பத்ம ஆராதனையில் முதலமைச்சர் பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் பெரிய ஜீயர் மடத்தின் சிறப்பு ஆராதனையிலும் பங்கேற்றார்.

இதனையடுத்து, முதலமைச்சர் இன்று பிற்பகல் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் திருப்பதி சென்ற தமிழகத்தின் துணைமுதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் நேற்று அதிகாலை தனது பேரனுக்கு முடி காணிக்கை செலுத்தி, அதிகாலை  சுப்ரபாத சேவையின்போது, ஏழுமலையானை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மற்றும் துணைமுதல்வர் தொடர்ந்து திருப்பதி சென்றது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.