சென்னை: எடப்பாடி தலைமையிலான அதிமுக  அரசின் கடைசி நாள் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து உள்ளது. இன்றைய கடைசி நாள் கூட்டத்தில் விவசாய கடன் தள்ளுபடி மற்றும் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.  கடந்த 2 ஆம் தேதி  தொடங்கிய கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆளுநர் உரையாற்றினார்.  அதையடுத்து 3வது நாள், மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி. உள்பட  25 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்றுமுதல் கவர்னர் உரை மீதான விவாதங்கள் எதிர்க்கட்சியினர் நன்றி நடைபெற்றது. இன்று முதல்வர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பதிலுரை ஆற்றினார். அத்துடன், விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் அள்ளி வீசினார். மேலும் பல மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தனி செயலர்களின் பதவிக் காலத்தை நீடிக்கும் மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று  ஜெயலலிதா பெயரில் பல்கலைக் கழகம் அமைக்கும் மசோதா, அண்ணாமலை பல்கலைக் கழக திருத்த சட்ட முன்வடிவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைக் காலம் அதிகரிப்பு உள்பட  8 முக்கிய மசோதாக்கள் தாக்கலானது.

இந்த அனைத்து மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.