எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி

சென்னை: எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ள  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்த விஷயத்தில் எழுந்துள்ள பஞ்சாயத்துக்கு முதல்வரும் துணை முதல்வரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிரடியாக கூறி உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை கவனத்தில் கொண்டே தமிழக அரசியல் கட்சிகள் கொரோனா ஊரடங்கிலும் மக்கள் சேவையாற்றி வருகின்றன.

இந்த நிலையில், அதிமுகவில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்ப்பு ஒருபுறமும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து அதிமுகவை கைப்பற்றுவாரா என்று மற்றொருபுறமும் அதிமுக பெருந்தலைகள்  உள்பட தொண்டர்கள் வரை அனைத்து தரப்பினரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், அதிமுக அமைச்சர்களுக்கிடையே போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், ஓபிஎஸ் அல்லது சசிகலாவுக்கு ஆதரவாக முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் அமைச்சர்களும் அவ்வப்போது வெவ்வேறு கருத்துக்களை கூறி மக்களை குழப்பி வருகின்றனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்வர் என்று கூறி, எடப்பாடி பெயரை தெரிவிப்பதில் இருந்து நாசூக்காக கழன்றுகொண்டார்.

இதுபோன்ற சூழலில்,  2021ம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியோ, திமுக ஆட்சியோ எப்போதுமே முதல்வர் யார் என்பதில் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. கருணாநிதி இருந்தவரைக்கும் திமுக ஆட்சி என்றால் அவர்தான் முதல்வர் அதே போல அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரைக்கும் அவர்தான் இறுதிவரை முதல்வராக இருந்தார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச் சாமி என மாறி மாறி முதல்வராகி விட்டனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முதல்வராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்று   அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்,  முதல்வரும் துணை முதல்வரும் முதல்வர் பற்றிய பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி