தமிழக அரசு இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது…..டிடிவி தினகரன் பேச்சு

கோவை:

‘‘எடப்பாடி பழனிச்சாமி அரசு இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேனியில் வெற்றி பெற முடியாது’’ என்று டிடிவி தினகரன் பேசினார்.

கொங்கு மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் டிடிவி தினகரன் பேசுகையில்,‘‘மேற்கு மண்டலம் துரோகிகளை மீண்டும் தேர்வு செய்து தவறு இழைக்காது. நான் பூஜியம் என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்களால் என்னை ஆர்.கே.நகரில் தோற்கடிக்க முடியவில்லை.

துணை முதல்வர் பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்துவிட்டு தற்போது வருத்தமடைந்து கொண்டிருக்கிறார். அவர் அங்கே ஓரம்கட்டப்பட்டுள்ளார். இது அவரது செயல்பாடு காரணமாக கிடைத்தது. தேனி எனது மாவட்டம். அடுத்த முறை ஓ.பன்னீர்செல்வம் தேனியில் வெற்றி பெறமாட்டார் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘கூவத்தூர் பழனிச்சாமி, முதல்வர் பதவிக்காக சசிகலா காலில் எப்படி விழுந்தார் என்பதை தமிழகம் அறியும். ஆனால், நான் பதவிக்கு வருவதற்காக யாருடைய கால்களையும் தொடவில்லை. நீங்கள் எல்லோரும் இந்த கூட்டத்துக்கு வருகை தந்ததற்கு பணமா காரணம்?.

இங்குள்ள பெரும்பாலான மக்கள் தாங்களாகவே முன்வந்து செந்தமாக வந்துள்ளனர். வாகன வசதி இல்லாதவர்களுக்கு உள்ளூர் தலைவர்கள் வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அது மட்டும் தான் நாங்கள் செய்தது. நாங்கள் பிரியாணி, மதுபானம். முட்டை போன்றவற்றை கொடுத்து கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.