நாடாளுமன்றத்தில் மோடிஅரசுக்கு ‘ஜால்ரா’ போடும் ஓபிஎஸ் மகன்! எடப்பாடி அதிருப்தி

சென்னை:

மிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு எம்.பி.யான ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தின் நாடாளுமன்ற   செயல்பாடுகள் அதிமுக கட்சிக்கும், தமிழக அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி வருவதாக எடப்பாடி தரப்பு அதிருப்தி தெரிவித்து உள்ளது. இது அதிமுகவின் இரட்டை தலைகளுக்கு இடையே நடைபெற்று வரும் பனிப்போரை மேலும் அதிகரித்து உள்ளது.

மோடி அரசு நாடாளுமன்றத்தில் முத்தலாக் உள்பட பல்வேறு புதிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது. மத்தியஅரசின் அனைத்து திட்டங்களுக்கும் அதிமுக எம்.பி.யான ரவீந்திரநாத், ஆமாம் சாமி போட்டு ஜால்ரா அடித்து வருகிறார்.

சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா விஷயத்தில், மக்களவையில் பேசிய ரவீந்திர நாத், மசோதாவை வரவேற்று பேசினார். ஆனால், மாநிலங்களவையில் அன்வராஜா, முத்தலாக் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு, முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பாக இருந்து வந்த நிலை யில், ரவீந்திரநாத் கட்சியின் நிலைப்பாட்டை மீறி ,  “இந்த மசோதா மூலம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமை களையும், நல் வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ள பாலின சமத்துவத் துக்கு, இந்த முத்தலாக் சட்ட திருத்த மசோதா மேலும் வலு சேர்க்கிறது. சமூக சடங்குகளை பெண்கள் மீது திணிக்காமல், சம உரிமைகளை வழங்கிடும் முத்தலாக் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவளிக்கிறோம்” என்று பேசினார்.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற பரபரப்பான விவாதத்தைத் தொடர்ந்து,   காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் வெளி நடப்பு செய்தன. இதனையடுத்து எதிர்கட்சிகளில் திருந்தங்கள் அனைத்தையும் நிராகரித்து மக்களவையில் முத்தலாக் சட்ட மசோதா நிரைவேற்றப்பட்டது. இந்த மசோதா  இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் முத்தலாக் விவகாரத்தில், கட்சித்தலையின் ஆலோசனை கேட்காமல், ரவீந்திரநாத் மோடி அரசுக்கு ஆதரவாக பேசியது  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  அவரது பேச்சு,  தற்போது வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரித்து விடும் என்றும் அஞ்சப்படுகிறது.

வேலூர் தொகுதி மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில்தான், வேலூரைச் சேர்ந்த முஹமது ஜானை அறிவித்து, மாநிலங்களவை உறுப்பினாராக்கினார் எடப்பாடி. ஆனால், தற்போது ரவீந்திரநாத்தின் நடவடிக்கை வேலூர் தொகுதி வெற்றிக்கு உலை வைத்துவிடும் என்று கூறப்படுகிறது.  முத்தலாக் சட்டத்திருத்த மசோதா’ வை அ.தி.மு.க ஆதரிப்பதன் மூலம், வேலூரில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில்,  துணைமுதல்வர் ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம்கேட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சமீபத்திலும் தனியாக டில்லி சென்ற ஓபிஎஸ் அங்கு  பல மத்திய அமைச்சர்களையும், பாஜக தலைவர்களையும் சந்தித்து தனி லாபி நடத்தி வருகிறார். இது எடப்பாடி தரப்புக்கு மேலும் கடுப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாகத்தான், ரவீந்திரநாத், பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ரவீந்திரநாத்தின் நடவடிக்கை காரணமாக, அதிமுகவில் எழுந்துள்ள விரிசல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். ரவீந்திரநாத்துக்கு ‘செக்’ வைப்பது குறித்து எடப்பாடி தரப்பு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அதிமுக தலைமை நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி