தாயார் தவுசாயம்மாள் மறைவு: முதல்வர் எடப்பாடிக்கு இந்தியில் இரங்கல் கடிதம் எழுதிய அமித்ஷா…

சென்னை: தமிழக முதல்வரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைச்சர் உள்துறை அமித்ஷா இந்தியில் கடிதம் எழுதியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின்  தாயார் கே.தவுசாயம்மாள் கடந்த  12 ந் தேதி அன்று இறைவனடி சேர்ந்தார். அதையடுத்து, 13 ந் தேதி  காலை அவரது உடல் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  அவரது  காரியம் (சாங்கியம்) நாளை (15 ந் தேதி) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சிலுவம் பாளையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், துணை ஜனாதிபதி எம்.வெங்கைய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பி உள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், தாயாரை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும் துணைமுதல்வர்ஓபிஎஸ் உள்பட தமிழக அமைச்ச்ரகள் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்றும் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ச.ராமதாசு, மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி., சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா அர.சக்கரபாணி, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர். சரத்குமார், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் சார்பாகவும், தேமுதிக கட்சி சார்பாகவும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசி மூலமாக முதலமைச்சரை தொடர்பு கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்து, ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வரின் தாயார் மறைவு குறித்து இந்தியில் இரங்கல் கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓருவேளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்தி தெரிந்திருக்குமோ.. என்னவோ…?