சேலம்: உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவில் காலமான தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம் நடைபெற்றது. முதல்வர் பழனிச்சாமி கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

வயது முதிர்வு காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த முதல்வரின் தாயார்   தவசாயி அம்மாள்  இடுப்பு வலி காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 93. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.15  மணிக்கு காலமானார். அதையடுத்து, அவரது உடல், சொந்த ஊரான
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு, உடனே சாலை மார்க்கமாக சேலம் விரைந்தார். அங்கு அவரது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாயாரின் உடலுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பண்ணன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோவை ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதையடுத்து, இறுதிச்சடங்கு செய்யப்பட்டு,  எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலிருந்து, அவரது தாயாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மயானத்தில் காலை 9.30 மணியளவில் எரியூட்டப்பட்டது. முதலமைச்சரின் அண்ணன், தாயாரின் உடலை எரியூட்டினார்.

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு, கவர்னர் பன்வாரிலால், துணைமுதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், கி.விரமணி  உள்பட  அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.