இந்தியாவை மோடி புதிய யுகத்துக்கு எடுத்துச் செல்வார் : முதல்வர் எடப்பாடி

சென்னை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடி இந்தியாவை புதிய யுகத்துக்கு அழைத்து செல்வார் என புகழ்ந்துள்ளார்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்  தினத்தந்தி இதழின் பவள விழா கொண்டாட்டம் இன்று நடந்தது.  அதில் பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நிர்மலா சீதாரமன், பொன்.  ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.  அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உரையில், “பத்திரிகை என்பது ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் நான்காவது தூண் ஆகும்.   மக்களின் நாடியைப் பிடித்துப் பார்ப்பதும் அவர்களுக்கு செய்திகளை அளிப்பதிலும் பத்திரிகை முதல் இடத்தை வகிக்கிறது.  ஜனநாயகத்தின் இரு சக்கரங்களில் ஒன்று பத்திரிகை, மற்றது அரசு.   இந்தப் பத்திரிகை உலகில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு புதிய அத்தியாயத்தை தினத்தந்தி மூலம் உருவாக்கியவர் ஆதித்தனார்.  அவர் தமிழ் பத்திரிகைகளை புது யுகத்துக்கு அழைத்துச் சென்றார்.   அதே போல இந்தியாவை புதிய யுகத்துக்கு பிரதமர் மோடி கொண்டு செல்வார்.  மக்களுக்க்காக அல்லும் பகலும் பாடுபடும் ஒரே பிரதமர் மோடி தான்.   அவரது தலைமையில் நடைபெறும் இந்த விழா வரலாற்றில் புகழ்ப் பெறப்போகும் நிகழ்வாகும்” என மோடியை புகழ்ந்துள்ளார்.