சென்னை:

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 12.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள  கோளரங்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தலைமைச் செயலாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள கல்லூரி கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

அதையடுத்து,  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் அமைந்துள்ள பி.எம்.பிர்லா கோளரங்கத்தில், 10 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மின்னணு கருவியுடன் கூடிய கோளரங்கம் மற்றும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் கருவி ஆகியவற்றின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

பிர்லா கோளரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள  மின்னணு கருவியுடன் கூடிய கோளரங்கத்தின் மூலமாக பகலிலேயே இரவு வானின் அமைப்பை துல்லியமாக காண முடிவதுடன், பல்வேறு நாடுகளின் இரவு வான் அமைப்பு, பருவ காலங்களில் ஏற்படும் வான் அமைப்பு, கோள்களின் நகர்வுகள் போன்றவற்றை காண்பதோடு, விண்வெளிக்கே பயணம் செய்து கோள்கள், விண்மீன்கள் போன்றவற்றை அருகே சென்று காண்பது போன்ற உணர்வையும் பார்வையாளர்கள் பெற இயலும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோளத்தில் அறிவியல் கருவி மூலமாக, வானிலை, விமானத்தின் இடப்பெயர்ச்சி, செயற்கை கோளின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை அறியவும், நில அதிர்வு, சுனாமி மற்றும் இதர இயற்கை நிகழ்வுகளையும், புவியின் வளிமண்டலம், பெருங்கடல்கள், நிலப்பரப்பு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களையும், சூரியக் குடும்பத்தின் கோள்களைப் பற்றிய விவரங்களையும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தொழில்நுட்ப கல்வி இயக்குநர் கே.விவேகானந்தன், கல்லூரிக் கல்வி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) சி.ஜோதி வெங்கடேசுவரன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் (பொறுப்பு) சௌந்தரராஜபெருமாள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.