அட்டைக் கத்தி சுழற்றுகிறார் எடப்பாடி; ஆட்டம் முடியும்… ஆறு மாதத்தில் விடியும்…!! ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்களின் வாழ்வாதாரம், ஜிஎஸ்டி,  நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் விவாதிக்காமல் , நீட் தேர்வை தமிழகத்துக்குள் நுழைத்த தமழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி,  பேரவையில் அட்டைக் கத்தி சுழற்றுகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

சென்னை – கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது, இத்தனை வன்மத்துடன் முதலமைச்சர் திரு. பழனிசாமி பேசியிருக் கிறாரே… நீட் தேர்வு நடப்பதற்கும் மாணவமணிகளின் உயிர்ப்பலிகளுக்கும் தி.மு.க. மீது பழி போடுகிறாரே… அதற்கு தி.மு.க. எந்தப் பதிலும் சொல்லவில்லையே என்று கழகத் தோழர்களும், கழகத்தின் ஆதரவாளர்களும், ஏன், பொதுமக்களுமேகூட நினைக்கக்கூடிய கட்டாயத்தைத் திட்டமிட்டுத் திணிக்கிறது, நாள்தோறும் பொய்களையே விற்றுப் பிழைப்பு நடத்தும், ஊழல் மலிந்த உதவாக்கரை அ.தி.மு.க. அரசு.

சட்டமன்றக் கூட்டத்தொடர் என்பது, தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனுக்காகவும், மாநிலத் தின் வளர்ச்சிக்காகவும், மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகக் கருத்துகளை எடுத்து வைக்கின்ற இடம். ஆளுந்தரப்பினரைப் போலவே, அவர்களுக்குச் சற்றும் குறைவின்றி, எதிர்த்தரப்பினருக்கும் கருத்துரிமை உள்ள ஜனநாயக மன்றம். அதற்கேற்ற கால அளவும் – போதிய அவகாசமும் வழங்கப்படுவதே சட்டமன்ற ஜனநாயக மரபு.

சட்டப்பேரவையை அலங்கரித்த ஆளுமை மிக்க தலைவர்களால் நிமிர்ந்து நிலைத்திருக்கும் ஜனநாயகம் குறித்து, குனிந்து தரையைக் கவ்வி ஆமையைப் போலே தவழ்ந்து சென்று பதவி நாற்காலியைப் பற்றிக் கொண்டவர்களால்  ஒருபோதும் அறிய முடியாது. அடிமை ஆட்சியாளர்கள் நடத்துவது சட்டமன்றக் கூட்டமல்ல; ஓரங்க நாடகம்.

எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரித்துவிட்டு, சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு, அதனை ஊடகங்கள் வழியே ஊதிப்பெருக்கினால் மக்களை ஏமாற்றிவிடலாம் என மனப்பால் குடிக்கிறது ஆளுங்கட்சி. மூன்று நாட்கள் மட்டுமே சட்டமன்றக் கூட்டம் என்ற நிலையில், அதில் ஆரோக்கிய மான விவாதங்களை நடத்திடும் வகை தொடர்பாக, பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் பேரவைத் தலைவரிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தது.

ஆறுமாத கால கொரோனா ஊரடங்கால், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் முழுவது மாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலான அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள், இவற்றின் வாயிலாகத் தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன, எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை முறையாகவும் முழுமையாகவும் நடத்தாமல், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி, அதிலும் ஆளுங்கட்சி தோல்வியடைந்த நிலையில், தி.மு.க.,வினர் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதற்காக, ஜனநாயகத்தின் அடித்தளமான ஊராட்சி அமைப்புகளைப் பலவீனப்படுத்தியது அ.தி.மு.க. அரசு.

‘ஜல்ஜீவன் மிஷன்’  திட்ட முறைகேடுகளுக்காக முன்கூட்டியே ஊராட்சித் தீர்மானம் மற்றும் செயல்திட்டங்களைப் பெற, புதுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர்களை மிரட்டுவது – ஊராட்சி மன்றங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்காமல், ‘பேக்கேஜ் டெண்டர்’ விடுவது குறித்து விவாதித் திருக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி மூலமாக மாநிலத்தின் வரி வருவாய் மத்திய அரசிடம் நேரடியாகச் சென்றுவிடுவதால், அதில் மாநிலங்களுக்குத் தரவேண்டிய பாக்கித் தொகையை வலியுறுத்திப் பெறாதது குறித்து விவாதிக்கவும், தமிழ்நாடு அரசு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், அரசின் கடன் சுமை 4.56 லட்சம் கோடி ரூபாயாக இருப்பது குறித்து விவாதிக்கவும் நேரம் ஒதுக்கியிருக்க வேண்டும்.

இவற்றில் எது பற்றியும் பேரவைக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவில்லை. மக்கள் நலனுக் கான திட்டங்களில் அக்கறை செலுத்தாமல், ஊழல் செய்வதற்காகவே சில திட்டங்களை உருவாக்கி, டெண்டர்களை விடுவதில் மட்டும் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள், தங்கள் மீதான தவறுகளை மறைப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பழி போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

‘நீட்’ தேர்வு ஏற்படுத்தும் அச்சத்தால், மாணவமணிகளின் உயிர் பறிபோவது பற்றிக் கேட்டால், தி.மு.க.,தான் காரணம் என்கிறார் மனசாட்சி என்பதே  இல்லாத முதலமைச்சர். தி.மு.க. ஆட்சியிலா நீட் தேர்வு நடந்தது என்று கேட்டால் பதில் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொதுநுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அதற்கான சட்ட ஒப்புதலைக் குடியரசுத் தலைவரிடம் பெற்றது தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு.

அதனடிப்படையில்தான் பின்னர் வந்த அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அரசிலும், மருத்துவக் கல்லூரிகளில் +2 பொதுத் தேர்வுகளின் அடிப்படையில் கலந்தாய்வுகள் நடத்தித்தான் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்தச் சட்டப் பாதுகாப்பினை உரிய முறையில் எடுத்துரைத்து, நீதிமன்றத்தில் விலக்குப் பெற்றிருக்க வேண்டிய திறன் இல்லாமலும்; சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தந்த இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டிய நிலையில், அந்த மசோதாக்கள் என்னவாயிற்று – எங்கே போயிற்று என்பதைக் கூட மக்களிடம் தெரிவிக்காமல் மறைத்த மாபாதகர்களின் செயல்களால்தான் ‘நீட்’ எனும் பலிபீடத்தில் மாணவமணிகள் பலரது உயிர்கள் பறிக்கப்படுகின்றன.

நுழைவுத் தேர்வை ரத்து செய்து, சட்ட அங்கீகாரம் பெற்ற மாநிலத்தில், நீட் தேர்வை நுழையச் செய்ததது திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுதான். நாடாளுமன்ற மாநிலங் களவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்து மறைமுக ஆதரவு அளித்ததாலும், அ.தி.மு.க. அமைச்சர் தனது டெல்லி எஜமானர்களின் உத்தரவுப்படி கையெழுத்து இட்டதாலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வு எளிதாக நுழைந்தது. இவை அனைத்தையும் மறைத்துவிட்டு, சட்டமன்றப் பாதுகாப்பைப் பயன்படுத்தி, தி.மு.க. மீது பழிபோட்டுத் தப்பிக்கலாம் எனச் சட்டப்பேரவையில் ஆவேசம் காட்டுகிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி.

ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வருபவர்கள் எதற்கெடுத்தாலும் எதிர்க்கட்சிதான் காரணம் என்று சொல்வது,  அவர்களின் அலட்சியத்தையும் அக்கறையற்ற தன்மையையுமே காட்டுகிறது. கொரோனா நோய்த் தொற்று பற்றி முந்தைய பேரவைக் கூட்டத் தொடரில் தி.மு.கழகம் விடுத்த முன்னெச்சரிக்கைகளை அலட்சியம் செய்த இதே ஆட்சியாளர்கள், அன்றைக்கு தி.மு.கழகம் எவற்றை வலியுறுத்தியதோ, அவற்றைத்தானே இந்த கூட்டத் தொடரில் பின்பற்றினர்! அதுமட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்றக் கூடம் நெருக்கடி யாக உள்ளது – போதிய இடைவெளி இல்லை என்பதால்தான் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சிறப்பான தலைமைச் செயலகத்தைத் தலைவர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் வடிவமைத்து, நேரடிப் பார்வையில் கட்டி முடித்தார். அரசியல் காழ்ப்புணர்வால் அதனைச் சிதைத்துவிட்டு, இப்போது கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, சட்டமன்றக் கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கத்திற்கு இடம் மாற்றியதிலிருந்தே தி.மு.கழகத்தின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்துகொள்ள முடியும்.

புரிந்தும் புரியாதது போல – அறிந்தும் அறியாதது போல – வஞ்சக நாடகம் நடத்திக் கொண்டிருக் கிறது அ.தி.மு.க. அரசு.

காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்து, அதற்காகத் தனக்குத்தானே ஏற்பாடு செய்து கொண்ட விழாவில், ‘காவிரி காப்பாளர்’ என்ற பட்டத்தையும் வாங்கிக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சியில்தான், டெல்டா பகுதிகளில் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணிகள் இன்னமும் தொடர்கின்றன. இதைத் திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்டினால், தி.மு.க. ஆட்சியில்தான் திட்டம் வந்தது என்கிறார்கள் ஆளுங்கட்சியினர். எங்கள் ஆட்சியில் எங்கே குழாய் பதித்தோம் என்று கேட்டால், அதற்குப் பதில் கிடையாது. தொடர்ச்சியாகக் கேள்வி கேட்பதற்கும் அனுமதி கிடையாது. இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற ஜனநாயகத்தின் லட்சணம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற வரையறைக்குள் வருகின்ற திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி உள்ளிட்ட 8 இடங்களில், ஒ.என்.ஜி.சி. சார்பில், எண்ணெய்க் கிணறுகள் அமைக்க 2023-ஆம் ஆண்டு வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியிருப்பதை எதிர்த்து, விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காவிரி காப்பாளர் என்று களிப்புடன் பட்டம் சூட்டிக் கொண்டு, நானும் விவசாயிதான் என்று நல்லவர் வேடம் போடும் முதலமைச்சர், இது குறித்து வாய் திறக்கவில்லை; அது பற்றி பேரவையில் விவாதிக்கவும் நேரம் ஒதுக்கவில்லை.

விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளத்தின் திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் அவர்கள் தனது மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்திருக்கிறார். விவசாயிகளின் விளைபொருட்களை கார்ப்பரேட்டுகள் பதுக்கி வைத்துக்கொள்ள வழி வகுக்கவும் – விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் ஆதார விலைக்குக் குந்தகம் விளைவிக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகியவை இந்திய விவசாயிகளின் வாழ்வுக்கு எதிரானது என ஒட்டுமொத்த நாட்டிலும் உள்ள விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. இதனைப் பாராட்டி ஆதரித்திருப்பது, விவசாயி வேடத்தில் உள்ள திரு. பழனிசாமி அரசு, ‘அரசியல் வியாபார அடிமை அரசு’ என்பதை அப்பட்டமாக நிரூபித்திருக்கிறது!

அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி – வஞ்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சி குறித்து, ஜனநாயக ரீதியாக பேரவையில் பேசுவதற்கோ – ஆரோக்கியமான விவாதத்திற்கோ இடமளிக்கப்படு வதில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, பணி கிடைக்காமல் காத்திருப்போர் அதிக எண்ணிக்கையில் உள்ள நிலையில், முதுநிலை (சீனியாரிட்டி) அடிப்படையில் அவர்களுக்குப் பணி வழங்காமல், தொடர்ந்து தகுதித் தேர்வுகளை நடத்தி, மற்றவர்களைப் பணியில் சேர்த்து வருவதால், தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தப் பணி நியமனங்களில் ஏராளமான ஊழல் நடைபெறுகிறது என்றும், தகுதித் தேர்வுச் சான்றிதழ் 7 ஆண்டுகள் வரையில்தான் செல்லும் என்பதால் 2013-ல் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை ஆயுட்காலச் சான்றிதழாக அறிவிக்க வேண்டும் என்றும், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஊழலையே இலட்சியமாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. அரசு, இந்தக் கோரிக்கைக்கு செவிமடுக்கவே இல்லை. இதுகுறித்துப் பேரவையில் பேசுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

ஜனநாயக மாண்புகளுக்கு இடமளிக்காமல், எதிர்க்கட்சிகளின் விவாதங்களுக்கு நேரம் வழங்காமல், மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், ஆள் இல்லாத இடத்தில் கம்பு சுழற்றி, செயற்கையான வீராவேசம் காட்டி, ஊடக வெளிச்சம் தேடிக் கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லாத பேரவைக் கூட்டத் தொடர் நிகழ்வுகளின் ஒரு பக்கத்தை மட்டுமே ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்புகிறார்கள்.

ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றி, உரத்த குரலில் பொய்களைப் பேசி, பரப்பிட  நினைக்கும் அ.தி.மு.க. அரசின் கபடவேடமும், கண்மூடித்தனமான  நாடகமும், அதிகக் காலம் நீடிக்காது.

ஆட்டம் முடியும்… ஆறு மாதத்தில் விடியும்…! சட்டமன்ற நாடகத்திற்கு மக்கள் மன்றம் திரைபோடும்!!’

இவ்வாறு அதில்  கூறியுள்ளார்.