எடப்பாடியின் நான்கு ஆண்டு கால ஆட்சி சிறப்பானதாக இல்லை! கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரி:

டப்பாடியின் நான்கு ஆண்டு கால ஆட்சி சிறப்பானதாக இல்லை என்றும், தமிழக சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை எதுவும் நிறைவேறும் வாய்ப்பு இல்லை என்றும் காங்கிரஸ் இலக்கிய அணி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி  பயிலரங்கத்தில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இலக்கிய அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதவாது,  “எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த  நான்கு ஆண்டுகால எடப்பாடி ஆட்சி சிறப்பான ஆட்சி என சொல்ல முடியாது. இரவும், பகலும் வந்து செல்வது போன்று நான்கு ஆண்டுகள் சென்றுள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் வளர்ச்சியை பொறுத்தவரை தோல்விதான். வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினர்கள். ஆனால் அதில் வெற்றிபெற முடியவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்திருக்க வேண்டும்.  சிறப்பு நிதி எதையும் மாநிலத்துக்குப் பெற முடியவில்லை.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆறாயிரம் கோடியை சிறப்பு நிதியாக வழங்கினார். அதுபோன்று இவர்களும் நிதி பெற்றிருக்க வேண்டும், ஆனால் பெறவில்லை. சிறப்பு நிதிதான் பெறவில்லை என்றால், மாநில அரசுக்கு சேரவேண்டிய நிதியையே இவர்கள் பெறவில்லை. மத்திய அரசு, மாநில அரசுக்கு தரவேண்டிய பங்குத்தொகை மட்டுமே ரூ. 12,000 கோடி இருக்கிறது. அந்த பணத்தை இதுவரை பெறமுடியவில்லை.

நம் திட்டங்கள் எல்லாமே அரைகுறையாக உள்ளது. தமிழகத்தின் நிதிச்சுமை இருபத்தைந்தாயிரம் கோடியாக இருக்கிறது. இவ்வளவு கோடிக்கு பற்றாக்குறை இருக்கும்போது புதிய திட்டங்களை ஏன் அறிவிக்கிறீர்கள். அதற்கு பணம் இல்லாததல் அந்த திட்டங்கள் அறிவிப்போடு சரி, நிறைவேறாது.

சிறந்த வரவு, செலவுத் திட்டம் என்றால், இவ்வளவு நிதி பற்றாக்குறையை சரிசெய்ய வரியின் மூலம் இவ்வளவு நிதி கொண்டு வருவோம், மத்திய அரசு மூலம் இவ்வளவு கொண்டு வருவோம், அன்னிய மூலதனம் மூலம் கொண்டுவருவோம், அல்லது சொந்த மாநிலத்திலேயே மூலதனத்தை பெருக்குவோம் எனச் சொல்லிதான் அதை சரிசெய்ய வேண்டும். ஆனால் அதுபோன்ற எந்த திட்டமும் மாநில அரசிடம் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Edappadi's four-year rule is not better! KS Alagiri, எடப்பாடியின் நான்கு ஆண்டு கால ஆட்சி சிறப்பானதாக இல்லை! கே.எஸ்.அழகிரி
-=-