கொல்கத்தா: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஈடன் கார்டன் மைதான டெஸ்ட் போட்டியைப் பகலிரவு ஆட்டமாக நடத்துவதற்கு வங்கதேச அணியிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், கங்குலி நினைத்தபடி நடக்குமா? எனவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால், இதற்கு வங்கதேச அணி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், இதன்மூலம் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு அணிகளும் பங்குபெறும் முதல் டெஸ்ட், இந்தூரிலும், இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தாவிலும் நடக்கிறது. பிசிசிஐ அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கங்குலியின் சொந்த ஊர் என்பதால், அதிகளவு ரசிகர்களை ஈர்க்கும் வகையில், முதன்முறையாக அதைப் பகலிரவு ஆட்டமாக நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் கங்குலி.

மேலும், போட்டியைக் காண வருமாறு, இந்தியப் பிரதமர் மோடி மற்றும் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சவுரவ். தான் நினைத்த முதல் காரியத்தையே வெற்றிகரமாக சாதித்துவிட்டார் கங்குலி என்று கிரிக்கெட் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.