புதுடெல்லி: குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின்போது, களத்தில் நின்ற பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களுக்கு ‘எடிட்டர்ஸ் கில்டு’ என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் விமர்சகர்கள் அடங்கிய அமைப்புதான் இந்த எடிட்டர்ஸ் கில்டு.

இவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின்போது செய்தி சேகரிக்க சென்றுள்ள பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இப்படி செய்தி சேகரிக்கச் செல்வது அடிப்படை ஜனநாயக உரிமை. நாட்டில் நடக்கும் போராட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கவே பத்திரிகையாளர்கள் செல்கின்றனர். ஆனால், அவர்களைக் குறிவைத்து காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலானது ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும். எனவே, செய்தி சேகரிக்கச்  செல்லும் பத்திரிகையாளர்களுக்குப் போதிய சுதந்திரம் அளிக்க உள்துறை அமைச்சகம் தகுந்த நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.