டில்லி

த்தரப் பிரதேச மற்றும் மத்தியப் பிரதேச அரசுகளுக்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   போராட்டம் குறித்து நடத்தப்பட்ட அனைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.  மத்திய அரசு இந்த  போராட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புதல் அளிக்காததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கடும் வன்முறை வெடித்தது.   இது குறித்து செய்திகள் வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் மீது உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச அரசுகளின் காவல்துறையினர்  வழக்குப் பதிந்துள்ளனர்.   இதனால் பத்திரிகையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  இதையொட்டி இந்தியப் பத்திரிகை ஆசிரியர் சம்மேளனம் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”குடியரசு தின விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர்கள் பலர் இந்த சம்மேளனத்தில் உறுப்பினராக இருந்தவர்கள் ஆவார்கள்.  வேறு சிலர் இன்னும் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் மீது மத்தியப் பிரதேச மற்றும் உத்தர்ப பிரதேச அரசு காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.  அரசுகளின் இத்தகைய அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு சம்மேளனம் கண்டனம் தெரிவிக்கிறது.

குறிப்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் மரணம் அடைந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.  இந்த செய்திகள் ஏற்கனவே சமூக வலைத் தளங்களில் வெளியானதால் இந்த செய்திகள் இவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.  ,மேலும் இந்த நிகழ்வை வெளியிட்டுள்ள சில  பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வின் போது அங்கு இருந்துள்ளனர்.  அப்படி இருக்க இவ்வாறு வேண்டுமென்றே இவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.   அதுவும் ஒரே நிகழ்வுக்காக வெவ்வேறு மாநிலங்களில் பதியப்பட்டுள்ளது.

இவ்வாறு பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவது ஒரு குடியரசு நாட்டில் உரிமைகளைப் பறிப்பதாகும்.  அவர்கள் சுதந்திரமாகப் பணி புரிவதைத் தடுப்பதற்கு சமமாகும்.  எனவே நாங்கள் உடனடியாக இந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்.  இதன் மூலம் ஊடகவியலர்கள் அச்சமின்றியும் சுதந்திரமாகவும் பணி புரிய வகை செய்ய வேண்டும்.   மேலும் சட்டத்துறையில் உயர் பதவியில் உள்ளோர் இதில் தலையிட்டு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து அரசுகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.