இந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் இடை நீக்கம்

டில்லி

த்திய முன்னாள் அமைச்சரும் மூத்த பத்திரிகையாளருமான அக்பர் மற்றும் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் ஆகியோரை இந்திய பத்திரிகையாளர் சங்கம் இடை நீக்கம் செய்துள்ளது.

ஏசியன் ஏஜ் என்னும் பத்திரிகையில் முன்னாள் மத்திய அமைச்சர் எம் ஜே அக்பர் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். அவருடைய பதவிக் காலத்தின் போது பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார்கள் எழுந்தன. தற்போது பிரபலமாகி வரும் #மீடூ என்னும் ஹேஷ்டாக் மூலம் அவர் மீது 15 பேர் பாலியல் புகார் தெரிவித்தனர்.

இவ்வாறு பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி உ ள்ளிட்ட 15 பெண்கள் அக்பர் மீது பாலியல் புகார் அளித்ததை ஒட்டி அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது நீதிமன்றத்தில் பாலியல் புகார் தொடர்பான வழக்கு பதியப்பட்டு நடந்து வருகிறது.

தெகல்காவின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது ஒரு பெண் பத்திரிகையாளர் பாலியல் சீண்டல் புகார் எழுப்பினார். அதுவும் மிகுந்த சர்ச்சை ஆனது. தற்போது தருண் தேஜ்பால் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டு அதுவும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (EDITORS GUILD OF INDIA) செயற்குழு கூட்டத்தில் இந்த வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இவர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதை ஒட்டி சங்கத்தில் இருந்து எம் ஜே அக்பர் மற்றும் தருண் தேஜ்பால் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.