திவாகரனை தூண்டிவிடும் எடப்பாடி பழனிச்சாமி?

நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்:

“தினகரன் – திவாகரன் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், திவாகரனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் தூண்டிவிடுகிறார் என்று அரசியல் மட்டத்தில் பேச்சு அடிபடுகிறது.

கடந்த பல மாதங்களாகவே, திவாகரன், “ என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் புறக்கணிக்கிறார். என் வசம், எட்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். தனிக்கட்சி துவங்க வேண்டியதுதான்” என்று தனது ஆதரவாளர்களிடம் சொல்லி வந்தாராம்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, பவருடன் வலம் வந்தவர் திவாகரன். சென்னை கோட்டையில் நடக்க வேண்டிய காரியங்களை மன்னார்குடியில் அமர்ந்தவாரே தீர்மானிக்கிறார் திவாகரன் என்று சொல்லப்பட்டது உண்டு.

தினகரன் – சசிகலா

தனது சகோதரி சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது தன்னிடம்தான் அதிகாரத்தைக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தார் திவாகரன். ஆனால் சசிகலாவோ, தினகரனிடம் அதிகாரத்தை ஒப்படைத்துச் சென்றார். அப்போதிலிருந்தே திவாகரன் மன உளைச்சலில் இருந்தார்.

 

திவாகரன் – பழனிச்சாமி

இந்த நிலையில்  டாக்டர் வெங்கடேஷின் தாயார்  சந்தானலெட்சுமி மறைந்தபோது, துக்க வீட்டில் சமாதானம் நடந்தது. அதாவது தினகரன் – திவாகரன் இருவரையும் இணைக்கும் முயற்சி நடந்தது.

இதையடுத்து திவாகரன் அமைதியானாலும் தன் மகன் ஜெயானந்துக்குக் கட்சியில் மாநில அளவில் முக்கியப் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று தினகரனிடம் கூறினார். ஆனால் அதை ஏற்கவில்லை.

‘‘கட்சியை முழுமயாக நான் நிர்வகிக்கிறேன்.  குடும்பத்தினர் எனக்குப் பின்னால் உதவிகரமாக இருங்கள்” என்றார்.

மேலூரில் நடத்திய முதல் கூட்டத்தின்போது போனால் போகிறதென்று மேடையில் ஜெயானந்தை உட்கார வைத்தார் தினகரன்.

தினகரனின் கட்சியில் தனக்கு பொறுப்பு அளிக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த ஜெயானந்த், ‘போஸ் மக்கள் பணியகம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார். மாவட்டவாரியாக நிர்வாகிகளை நியமித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தி தனியாக செயல்பட ஆரம்பித்தார்.

திவாகரனும் மன்னார்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை நடத்தி, அதில் தனது மகன் ஜெயானந்துக்கு முக்கியத்துவம் அளித்தார். இதனால் இருவர்மீதும் தினகரன் ஆத்திரம் அடைந்தார்.

இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் மரணமடைந்தார். இந்த துக்க நிகழ்வுக்கு சிறையில் இருந்து பரோலில் வந்தால் சசிகலா.

அந்த நேரத்தில் சசிகலா முன்னிலையிலேயே திவாகரன் – தினகரன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திவாகரன், ‘‘நான் இந்த கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். ஆனால் என்னை தினகரன் ஒதுக்குகிறார்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தனது மகனுக்கு தினகரன் கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

தினகரனோ, ‘‘நான்தான் கட்சியை பொறுப்போடு வழிநடத்துகிறேன். திவாகரன் மீடியாவிடம் தன்னிஷ்டத்துக்கு எதையாவது பேசிவிடுகிறார். கட்சிக்காரர்களையும் அனுசரிப்பதில்லை.

ஜெயானந்த் தனியாக ஓர் அமைப்பைத் தொடங்கி போட்டி இயக்கம் நடத்த முயற்சிக்கிறார்.

இதெல்லாம் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே என்னை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். குடும்பத்தில் எவரானாலும் பின்னணியில் இருந்து எனக்கு ஆதரவு அளித்தால் போதும்” என்றார்.

சசிகலாதான் இருவரையும் சமாதானப்படுத்தினார். ஒருகட்டத்தில் ஆத்திரமான சசிகலா, “இருவரும் இப்படி அடித்துக்கொண்டால் சொத்துக்களை எல்லாம் அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துவிடுவேன்” என்றார்.(இது குறித்து ஏற்கெனவே பத்திரிகை டாட் காம் இதழில் எழுதியிருக்கிறோம். )

இதையடுத்து இருவரும் அமைதியானார்கள். ஆனால் இருவருக்குள்ளும் நீறுபூத்த நெருப்பாக வெறுப்பு கனன்றுகொண்டே இருந்தது.

இப்போது இருவருக்கிடையேயான மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் திவாகரன் தனது மன்னார்குடி வீட்டில் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ‘‘தினகரனை அதிகாரத்துக்குக் கொண்டு வந்ததால்தான், மாநில ஆளும்தரப்புக்கு நம்மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இப்போதும் சசிகலாவை அவர்கள் ஏற்கத் தயாராக இருக்கிறார்கள்.

தவிர தினகரன் கட்சியிலும் அவருக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. அவர் தனதுமனைவி அனுராதா, மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் சொற்படி நடக்கிறார். இதுதான் அதிருப்திக்கு காரணம். நாஞ்சில் சம்பத் வெளியேறிய நிலையில், தங்கதமிழ்ச்செல்வன் உட்பட பலர் அதிருப்தியோடு அங்கே இருக்கிறார்கள்.

ஆகவே நாம் ஒரு தனி அணி துவங்க வேண்டும். சசிகலாவை நமக்கு ஆதரவு அளிக்கச் செய்ய வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

இந்த நிலையில், தினகரன் தரப்பினர், “தினகரன் பொறுப்புக்கு வந்த பிறகுதான் மன்னார்குடி குடும்பத்தின் மீதிருந்த கெட்டபெயர் மறைந்து வருகிறது. கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். ஆனால் அவருக்கு எதிராக திவாகரனை கொம்புசீவி விடுகிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.

திவாகரனுக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் மூலம் இது குறித்து தகவல் சொல்லி அனுப்பினார் எடப்பாடி” என்கிறார்கள்.

 

You may have missed