அடிப்படை கல்வி உரிமையைப் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் : ஆர்வலர்கள் கண்டனம்

பெங்களூரு

னியார்ப் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கி உள்ளதால் அனைவருக்கும்  கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயக் கல்வி என்பது அடிப்படை உரிமை என இந்திய அரசியல் சட்டம் விதி எண் 21 ஏ தெரிவிக்கின்றது.  ஆனால் தற்போது கொரோனா அச்சத்தால் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.   கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாத நிலை உள்ளதால் பள்ளிகள் திறப்பதும் மேலும் மேலும் தள்ளி வைக்கப்படுகிறது.  இந்நிலையில்  சில தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் காலாபர்கி மாவட்டத்தில் உள்ள கால்கி கிரமத்தில் உள்ள 37 வயது பெண்மணி சங்கமித்ராவின் குழந்தைகள் ஒரு தனியார்ப் பள்ளியில் 6 மற்றும் 8 ஆம் வகுப்பில் படிக்கின்றனர். கட்டிட மேஸ்திரி வேலை பார்க்கும் இவர் கணவர் முரளி தற்போது பணி இல்லாததால் ஒரு மளிகைக்கடையில் பணி புரிகிறார்.   இவரிடமும் இவர் மனைவியிடமும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன.

ஆனால் முரளி தனது பணிக்கு போன் தேவை என்பதால் அதை எடுத்துச் சென்று விடுகிறார்.  இல்லத்தரசியான அவர் மனைவியில் போனை இரு குழந்தைகளும் ஆன்லைன் வகுப்புக்காகப் பயன்படுத்த வேண்டியது உள்ளது.  இரு குழந்தைகள் ஒரு போன் என்பதால் இவர்களில் ஒருவர் மட்டுமே பாடங்களைக் கவனிக்க முடிகிறது.

ஆனலைனில் வராத மாணவர்களுக்கு  வருகைப் பதிவு கிடைப்பதில்லை.   அந்த சிற்றூரில் இணைய சிக்னலும் சரிவர கிடைப்பதில்லை.   அத்துடன் ஆன்லைன் வகுப்புக்களுக்காக அதிகப் பணத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டியது உள்ளது.    தற்போது ஆன்லைன் வகுப்புக்களுக்காக அதிக அளவில் டேட்டாக்கள் தேவைப்படுவதால் அதிகப் பணமும் தேவைப்படுகிறது.  இதைப் போல் ஒவ்வொரு கிராமங்களிலும் பல சங்கமித்ராக்கள் உள்ளனர்.

பெங்களூரு நகரில் வசிக்கும் ரேவதி என்னும் 36 வயதுப் பெண் சமையல் வேலை செய்து வருகிறார்.அவரது குழந்தைகள் ஆன்லைன் வகுப்புக்காக அவர் மொபைல் வாங்கத் தனது இரு தங்க வளையல்களை விற்றுள்ளார்.  அது மட்டுமின்றி மொபைல் மூலம் கிடைக்கும் 1 ஜிபி மற்றும் 2 ஜிபி போதுமானதாக இல்லாததால் இவர் தனது மாத ஊதியமான ரூ.7000 ல் இணையக் கட்டணம் மட்டும் மாதத்துக்கு ரூ.1000 செலுத்தி வருகிறார்.

இது குறித்து கல்வி ஆர்வலர்கள் கல்விக்காகப் பெற்றோர்கள்  ஏராளமான பணம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்  இந்நிலையில் கர்நாடக மாநில அரசு ஆறாம் வகுப்பில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

தற்போது அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் நடப்பதில்லை,   தனியார் பள்ளிகளில் மட்டும் நடைபெறுகிறது.  அங்குக் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சாதாரண மக்களிடம் ஸ்மார்ட்போன்க்ள், லாப்டாப்கள் போன்றவை இல்லாததால் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.